New Trend Tamil

Browse all latest informations

Wednesday, July 24, 2019

கழுதையிடமிருந்து ஒரு பாடம்! - A lesson from the donkey

A lesson from the donkey

ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் உலகின் எதார்த்தங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன், "குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.
அதற்கு அந்த குரு "கழுதையிடமிருந்து தான்..." என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் "என்ன கழுதையிடமிருந்தா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.
"ஆமாம், அதனிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா? காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் தானே! அதை வைத்து தான்" என்று சொன்னார்.
அப்போது மற்றவன் "இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு" என்று கேட்டான். அதற்கு குரு "ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.