Akbar & Birbal Story
நான்கு முட்டாள்கள் !
(Four Fools)
ஒருநாள் என்னவோ தினசரி மிகப் பெரிய அறிவாளிகளையே சந்தித்துக் கொண்டிருந்தது போலவும், அப்படி சந்தித்து சந்தித்து மிகவும் அலுப்புத் தட்டி விட்டது போலவும், டில்லி பாதுஷா அக்பருக்கு இருப்பதிலேயே படு முட்டாள்களை சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஒரு நாள் உண்டாகி விட்டது! டில்லி பாதுஷாக்கள் என்றாலே அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான, மறை கழன்ற கேசுகள் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!
முட்டாள்களை சந்திக்க வேண்டுமென்ற ஆசை வந்தது சரி, அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது?
அக்பர் டில்லி பாதுஷா அல்லவா, உத்தரவு போட்டால் போயிற்று! அத்தனை முட்டாள்களும் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா என்ன?! ஆனாலும் அதில் கடினமான பகுதி என்னவென்றால், இருப்பதிலேயே வடிகட்டின முட்டாள்களாகப் பார்த்து அதில் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அதற்கு புத்திசாலித்தனமும், சாதுர்யமும் உள்ள ஒருவர் வேண்டாமா!
"கூப்பிடு பீர் பாலை!" பாதுஷா அக்பர் காவலருக்கு உத்தரவிட்டார். பீர் பாலும் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.
"பீர்பால்! இருப்பதிலேயே வடிகட்டின முட்டாளிலும் வடிகட்டின முட்டாளாக ஒரு நான்கு பேரைப் பார்க்கவேண்டும்! கண்டு பிடித்து அரசவைக்கு அழைத்து வாரும்!"
"அப்படியே செய்கிறேன் பாதுஷா!" சொல்லி விட்டு பீர் பால் புறப்பட்டு விட்டார்.
போகிற வழியில் தென்படும் மனிதர்களைக் கவனித்துக் கொண்டே பீர்பால் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.முட்டாள்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்,இருப்பதிலேயே அடிமுட்டாள்களாகப் பொறுக்கிஎடுக்க வேண்டாமா!
எதிரே ஒரு மனிதன், ஒரு திருமணத்திற்கு சீர்வரிசை கொண்டு போவது போல, பரிசுப் பொருட்களை ஊர்வலமாகக் கொண்டுபோவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவே அவனை நிறுத்தி விசாரித்தார்.
"ஐயா! எனக்கும் சோனியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. திடீரென்று அந்தப் பெண் என்னுடன் நிச்சயத்தை முறித்துக் கொண்டு வேறொருவனுடன் திருமணம் செய்து கொண்டு விட்டாள். வம்பு வழக்கு,ஏகப்பட்ட ரகளை, பிரச்சினைக்குப் பிறகுதான் திருமணம் நடந்ததாம்.அவளுக்குத் தான் இந்த சீர் வரிசையெல்லாம் எடுத்துப் போகிறேன்." என்று விவரம் சொன்னான் அந்த மனிதன். அவன் யார், அந்த சானியா யார் என்பதையெல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டு, பீர்பால் இவன் அடி முட்டாளிலும் வடிகட்டின முட்டாள் என்று முடிவு செய்தார்.
அடுத்து ஒரு மனிதன்,தலைக்கு மேல் புல்கட்டுச் சுமையைச் சுமந்து கொண்டு சினையாயிருந்த எருமை மீது உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவனை நிறுத்தி பீர்பால், புல்கட்டை எருமை மீது வைத்துக் கொள்ளாமல் எதற்காகத் தன தலை மீது சுமந்து கொண்டு போகிறான் என்று விசாரித்தார்.
"ஐயா! என்னுடைய எருமை சினையாயிருக்கிறது! அதன் மேல் புல்கட்டை வைத்துக் கொண்டு போனால், அதற்கு சுமையாக இருக்குமே என்று தான், நான் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, என்தலைமேல் புல்கட்டைச் சுமந்துகொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். எருமைக்கு பாரம் குறையும் அல்லவா?" என்று பதில் சொன்னானாம். அக்பருக்குக் காட்ட இவனை விட அடிமுட்டாள் வேறு எவனும் கிடைக்க மாட்டான் என்று பீர்பால் முடிவு செய்தார்.
சோனியாவுக்கு சீர்வரிசை கொண்டுபோனவன், எருமைக்கு சுமையைக் குறைக்கிறேன் என்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, புல்கட்டை சுமந்து போனவன் ஆக இந்த இரண்டு பேர்வழிகளையும் அழைத்துக் கொண்டு பீர்பால் அக்பரிடம் போனார்.
இரண்டு பேர் கதையையும் கேட்ட அக்பர், பீர்பால் தேர்ந்தெடுத்தது சரிதான் என்று ஒப்புக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துத் தான், தான் சொன்னது நான்கு பேர், பார்த்தது இரண்டைத்தான் என்று அக்பருக்கு உறைத்தது. பாதுஷாக்களாக இருப்பதில் மிகப் பெரிய சிரமம், தாங்கள் என்ன உத்தரவு போட்டோம் என்பதை நினைவு வைத்துக் கொள்வது தான்.
"பீர்பால்! உம்மை நான்கு முட்டாள்களை அல்லவா கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொன்னேன். மீதி இரண்டு பேர் எங்கே?" என்று கேட்டார் அக்பர்.
"நான்கு முட்டாள்களும் இங்கேயே இருக்கிறார்கள் பாதுஷா!" என்றார் பீர் பால். அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. பாதுஷாவாக இருப்பதனால் ஒன்று இரண்டுக்கு மேல் எண்ணத் தெரியாது என்று பீர்பால் நினைத்துவிட்ட்டானா என்ன?
"எங்கே அந்த மீதம் இரண்டு பேர்?"
"இதோ என்னைப் பாருங்கள் பாதுஷா! மூன்றாவதாக நான் இருக்கிறேன்! முட்டாள்களைத் தேடிக் கொண்டு போன என்னை விடப் பெரிய முட்டாள் வேறு எவராவது இருக்க முடியுமா? "
பீர்பால் இப்படித் தன்னையே முட்டாள் என்று சொல்லிக் கொண்டதில் அக்பருக்கு மிகவும் சந்தோஷம்! இத்தனை நாள் இவன் பெரிய புத்தி சாலி, பெரிய சாமர்த்தியக் காரன் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானே கூட இவனைப் பாராட்டி நிறைய சன்மானம் அளித்துப் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவனே தன்னை பெரிய முட்டாள் என்று சொல்லிக் கொள்வது கேட்பதற்கே எவ்வளவு சுகமாக இருக்கிறது! புத்தி சாலிகளுக்கு பாதுஷா ஒரு பொருட்டே அல்ல! முட்டாள்கள் இருந்தால் தான் பாதுஷாக்கள் பாதுஷாக்களாக இருக்க முடியும்!
பாதுஷாவின் சந்தோஷம் கொஞ்ச நேரம் நீடித்தது! அப்புறம் வழக்கமாக வருகிற சந்தேகம்வந்து விட்டது! பீர்பால்,கண்ணில் இரண்டைக் காட்டினான், தன்னையே மூன்றாவது முட்டாள் என்று சொல்லிக் கொண்டான். நாலாவது எங்கே?
"பீர்பால்! ஒன்று, இரண்டு, மூன்று! எங்கே அந்த நாலாவது முட்டாள்? இங்கேயே இருப்பதாக வேறு சொல்கிறாய்! என்னை ஏமாற்றுகிறாயா?" அக்பரின் கேள்வியில் கோபம் கொஞ்சம், குழப்பம் கொஞ்சம் கலப்படமாக வந்தது.
பீர்பால் மிகவும் பணிவோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பாதுஷாவிடம் நீட்டி, "நான்காவது மிகப் பெரிய முட்டாளை இதிலேயே பார்க்கலாம், பாதுஷா!" என்றார்!
கண்ணாடியில் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்ட பாதுஷாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை! மறுபடியும், பீர்பால் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டதும், தான் தோற்றுவிட்டதும் புரிந்தது.
"உருப்படியான வேலைகளை விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி அலைந்த நான் பெரிய முட்டாள் என்றால், அப்படி என்னைத் தேட அனுப்பித்தவர் என்னைவிடப் பெரிய முட்டாளாகத் தான் இருக்க வேண்டும்! இல்லையா பாதுஷா?! ஆக, நான்கு முட்டாள்கள் இங்கேயே இருப்பதாகச் சொன்னது தவறில்லையே!"
அசடு வழிய, பீர்பால் சொல்வதற்குத் தலையாட்டி சிரித்து மழுப்புவதைத் தவிர டில்லி பாதுஷாவுக்கு வேறு வழி தெரியவில்லை!
அக்பர் மனதுக்குள் கருவிக் கொண்டார். பீர்பால் நீ புத்திசாலிதான்! ஆனால், என்றைக்காவது ஒரு நாள், நீ என் முன்னால் மண்டியிட்டுக் கெஞ்சத் தான் போகிறாய்! அப்படி ஒரு நாள் வராமலா போய்விடும்?
பீர்பால் அக்பரைப் பார்த்துச் சிரித்தது, தன்னுடைய மனவோட்டத்தைப் புரிந்து கொண்டதால் தான் என்று அக்பருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது. சந்தேகமெல்லாம், இப்போதே அதைக் கேட்கலாமா, வேண்டாமா என்பது தான்!
இப்போது, பாதுஷாவுக்கு அடுத்த குழப்பம் ஆரம்பித்து விட்டது.