New Trend Tamil

Browse all latest informations

Monday, July 22, 2019

முதல் தகவல் அறிக்கை பற்றி பார்க்கலாம் (First Information Report )

First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை'. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.    
"இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.
உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட் டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும். சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக் கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.




அவருக்கும் மேல் உள்ள அதிகாரி களான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.


பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, 'குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்' ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்.
ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.